Saturday 15 September 2012


அஸ்ஸலாமு அழைக்கும் .........நண்பர்களே !

ஆக்கப்பணிகளே பெருக வேண்டும்!




உங்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனத்தில் ஒரு பணியாளர் நேரத்தோடு பணிக்கு வருவதில்லை; வேலைகளையும் ஒழுங்காகச் செய்வதில்லை; நிறுவனத்துக்குச் சொந்தமான பொருள்களில் மோசடி செய்கிறார்; ஏமாற்றுகிறார்; வாடிக்கையாளர்களுடன் எப்போதும் அடிதடி; சண்டை. அந்தப் பணியாளர் அழிவு வேலைதான் அதிகம் செய்கிறார் எனில் நீங்கள்  அவரை 
நேசிப்பீர்களா? 

இறைவனும் அப்படித்தான். தன் அடியார்கள்  எப்போதும் ஆக்கப் பூர்வ பணியில் ஈடுபடவேண்டும் என்றே விரும்புகிறான். இவ்வுலகை அழிப்பதையோ அலங்கோலப்படுத்துவதையோ, ஒழுக்கக்கேடுகள், அசுத்தங்கள், கொடூரங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றால் உலகை நாசப்படுத்துவதையோ அவன் விரும்புவதில்லை; விரும்புவான் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ‘சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடப் போகிறோம்’ என்று  முன்வருபவர்களில் யாரிடம் ஆக்க வேலை செய்யும் ஆற்றல் இருக்கிறதோ அவரையே தகுதியுடையவர்களாய் இறைவன் தேர்ந்தெடுக்கிறான். அவரிடமே பொறுப்புகளை ஒப்படைக்கிறான். அவ்வாறு பொறுப்பை ஒப்படைத்தபின் அவர்கள் ஆக்க வேலை எவ்வளவு செய்கிறார்கள், அழிவு வேலை எவ்வளவு செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

அழிவுப் பணிகளைவிட ஆக்கப்பணிகள் அதிகமாக நடைபெறும்வரை குற்றம் குறைகள் இருப்பினும் அவர்களிடமே உலகைச் சீர்திருத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. ஆனால், எந்தக் கட்டத்தில் அவர்களுடைய ஆக்கப்பணிகள் குறைந்து அழிவுப் பணிகள் அதிமாகிவிடுகிறதோ அந்தக் கட்டத்தில் இறைவன் அவர்களைத் தூக்கியெறிந்துவிடுகிறான். தகுதியுடைய வேறு மனிதர்களை பொறுப்பாளிகள் ஆக்கிவிடுகிறான். வான்மறை கூறுகிறது: ‘‘(நபியே) நீர் கூறுவீராக. இறைவா..! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே. நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியம் வழங்குகின்றாய். நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.’’ (3: 26) நாம் எந்தத் துறையில் எந்தப் பொறுப்பை வகிப்பவர்களாய் இருந்தாலும் சரி, ஆக்கப்பணிகளில் ஈடுபடுவோம்; அழிவுப் பணிகளிலிருந்து விலகியிருப்போம். இல்லையேல் இறைவன் அந்தப் பொறுப்பிலிருந்து நம்மைத் தூக்கி எறிந்துவிடுவான் என்பதை நினைவில் கொள்வோம்.....என்றும் நட்புடன்>>ரினாஸ்<<



No comments:

Post a Comment